Language

போராட்டங்கள்

போராட்டங்கள்

கள்ளுக்கடை மறியல் போராட்டம்

1921ஆம் ஆண்டு காந்தியார் கட்டளையை ஏற்று ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலுக்கு தலைமை தாங்கினார். அதன் காரணமாக கோவை சிறையில் ஒரு மாத தண்டனை அனுபவித்தார். சேலம் தாதம்பட்டியில் உள்ள தமது தோப்பில் இருந்த 500 தென்னைமரங்களையும் வெட்டி சாய்த்தார்.

வைக்கம் போராட்டம்

கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில் கோயிலை சுற்றியுள்ள 4 தெருக்களிலும் கீழ்சாதிக்காரர்கள் நடக்ககூடா தென்றிருந்த நடைமுறைக்கு எதிராக, 1924ஆம் ஆண்டு போராட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஈடுபட்ட கேரள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதால், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பெரியார் தலைமை ஏற்க அழைக்கப்பட்டார். அதன் காரணமாக பெரியார் வைக்கத்தில் 140 நாட்கள் தங்கி போராடினார். இரண்டு முறை சிறை தண்டனை பெற்றார். 74 நாட்கள் சிறையில் இருந்தார்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

1924இல் வ.வே.சு. அய்யர் கட்சியின் நிதியுதவி பெற்று சேரன்மாதேவியில் நடத்தி வந்த குருகுலத்தில் பார்ப்பனர் மாணவர்களுக்கு தனிப்பந்தி நடத்தினார். அதனை அறிந்த பெரியார் குருகுலத்துக்கு எதிராக போர் தொடுத்தார். குருகுலம் மூடப் படுவதற்கு காரணமாக இருந்தார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

சி.ராஜகோபாலச்சாரியார் 1937இல் சென்னை ராஜதானியின் பிரதமராகப் பொறுப்பேற்றார். தம் ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினார். தமிழர் படை சென்னை நோக்கி புறப்பட்டது. தோழர்கள் கைது, மரணம் முதலியன நிகழ்ந்தன. ஆச்சாரியார் பதவி விலகினார். பின் இந்தி திணிப்பு கைவிடப்பட்டது. ஓமந்தூரார் ராமசாமி முதல்வராக இருந்த போது 1948ஆம் ஆண்டு மீண்டும் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினார் பெரியார். கட்டாய இந்தி ஒழிந்தது. 1952, 1953, 1954 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார். 1955ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். இந்தி திணிப்பு செய்யப்படமாட்டாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ரயில் நிலையப் பெயர் பலகைகளில் தமிழ் முதலிடம் பெற்றது. தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் அறிவிப்போடு நிறுத்திக் கொண்டார் பெரியார்.

வகுப்புரிமை போராட்டம்

காங்கிரசில் இணைந்த போதில் இருந்தே, (அதற்காகவே காங்கிரசில் சேர்ந்தார்)பெரியார் வகுப்புரிமைக்காக ஓயாமல் போராடினார். ஒவ்வொரு காங்கிரஸ் மாநாடுகளிலும் வகுப்புரிமை தீர்மானத்தை கொண்டு வந்தார். அது மறுக்கப்பட்டபோது 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறினார் - காஞ்சிபுரத்தில்.

நீதிக்கட்சி ஆட்சியில் வழங்கப்பட்ட வகுப்புரிமை ஆணை (இடஒதுக்கீடு) சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டபோது பெரியார் மக்களை கூட்டிப் போராட்டம் நடத்தினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முதல் திருத்தம் கண்டது. இடஒதுக்கீடு மீண்டும் உயிர் பெற்றது. வடநாட்டு சுரண்டல் தடுப்புப் போராட்டம்.

தென்னாட்டு ஆதாரப் பொருட்களை வாங்கும் முதலாளிகள், அவற்றை முழுமையான பொருள்களாக்கி இங்கேயே கொண்டு வந்து விற்றுச் சுரண்டும் கொள்கையை 1950களில் பெரியார் சுட்டிக் காட்டினார். அதனை எதிர்த்து 1951 ஜனவரி 26இல் சென்னையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்

வர்ணாசிரமத்தையும், ஜாதி ஏற்பாட்டினையும் பாதுகாக்க கடவுள் கற்பிக்கப் பட்டது. முழுமுதற் கடவுளாக பிள்ளையாரை கருதுவதால் பிள்ளையார் சிலை உடைக்கும் போராட்டத்தை 1953இல் பெரியார் அறிவித்தார்.

குலக்கல்வி திட்ட எதிர்ப்பு போராட்டம்

சென்னை ராஜதானியின் பிரதமராக ராஜாகோபாலாச்சாரியார் பொறுப்பை ஏற்றவுடன் 6000 பள்ளிகளை மூடினார். அரைநாள் கல்வி - அரைநாள் ஜாதி வேலை எனும் குலக் கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதைக் கண்டித்து பெரியார் போராட்டம் நடத்தினார். குலக்கல்வி திட்ட எதிர்ப்பு படை சென்னையை நோக்கி சென்றது. ராஜ கோபாலச்சாரியர் பதவி விலகினார். இந்திய தேசியக் கொடி எரிப்புப் போராட்டம்.

இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்திய கூட்டாட்சியில் தமிழர்கள் இருக்க விரும்பாததை உணர்த்திடவும் 1955 ஆகஸ்ட் 1ஆம் நாள் இந்திய தேசிய கொடியை எரிப்பது என்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைவை உணர்ந்த முதலமைச்சர் காமராசர் இந்தித் திணிப்பு இல்லை என்று உறுதிமொழி பிரதமரிடமிருந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். அதன்படி, தேசியக் கொடி எரிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. (1955)

இராமன் படம் எரிப்புப் போராட்டம்

ஜாதியை பாதுகாக்கும் இராமன் செயலை (சம்பூகவதம்) கண்டிக்கும் வகையில் 1.8.1956 அன்று தமிழகம் எங்கும் இராமன் படம் எரிக்கப்பட்டது. (1956)

ஓட்டலில் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம்

ஓட்டல் பெயர் பலகைகளில் பிராமணாள் என்று எழுதியிருப்பது ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும். தமிழ்நாடு முழுவதும் பெயர் அழிப்பு கிளர்ச்சி நடைபெற்றது. சென்னையில் முரளிஸ் பிராமணாள் கபே கடை முன் 210 நாட்கள் மறியல் நடைபெற்று 837 பேர் கைதாகிய பின் பெயர் மாற்றத்தை அந்த உரிமையாளரே செய்தார். தந்தை பெரியாரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்

ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பெரியார் போராடினார். 26.11.1957 அன்று அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்தினார். 4000 பேர் கைதாகினர்.

தனது உரையில் வன்முறையைத் தூண்டியதாக ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் 6 மாத தண்டனைகளை விதித்து ஏக காலத்தில் அவர் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை (1957)

இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம்

இந்தித் திணிப்பு, டில்லி ஆட்சியின் வல்லாண்மை முதலியவற்றிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெற, 5.6.1960இல் தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியாரின் வேண்டுகோளை ஏற்று தேசப்படத்தை எரித்த 4000 பேர் கைதாகினர். ஆனால் தடுப்புக் காவல் சட்டப்படி பெரியார் 3.6.1960அன்றே கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு விடுதலையானார்.

இராமாயண எரிப்புப் போராட்டம்

திராவிடர்களை இழிவுப்படுத்தும் இராமாயணத் தையும் இராமனையும் ஒழுக்கக் கேட்டின் உறைவிடங்கள் என்று மக்களிடத்தில் எடுத்துக்கூறி நாடெங்கும் இராமாயண எதிரப்பு பரப்புரையை செய்து அதனை எரிப்புப் போராட்டத்தை 1966இல் நடத்தினார்.

எளிமையான வாழ்வே பெரியாரின் தனிச்சிறப்பு. அவருடைய விழைவுகள் ஏராளம். தேவைகள் மிகவும் குறைவு. வசதிகளை தவிர்த்து வந்தார். எந்தத் துறவியும் உலகில் அவரைப் போல் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்த பிறகு அவரது நூற்றாண்டையொட்டி அவருடைய நினைவை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசால் சிறப்பு அஞ்சல் தலையே வெளியிட்டது(1999) அரசு. உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு நாட்டின் அரசால் இப்படி கவுரவிக்கப்பட்ட நாத்திகர் பெரியார் என்பது வியப்புக்குரிய விசயம். அவர் மறைந்த பிறகும் இன்று வரை அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, முன்னிலை வகித்து சமூகநீதிக்காகப் போராடி வருகின்றனர் அவருடைய தொண்டர்கள்.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

psrpichennai@gmail.com

இணைந்திடுங்கள்